பெண் குழந்தைகள் பருவம் அடையும் வயதும், உணவின் பங்கும்-ஆராய்ச்சி முடிவு !
பெண் குழந்தைகள் பருவம் அடையும் வயதும், உணவின் பங்கும்-ஆராய்ச்சி முடிவு !
நீண்ட நாட்களாகவே பிராய்லர் இறைச்சிப் பற்றி அவ்வப்போது பல செய்திகள் சமூக ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. அதில் பெரும்பாலும் பிராய்லர் கோழி இறைச்சி உண்பதனால் பல்வேறு நோய்கள் வரும் என்று பீதியை கிளப்பும் செய்திகளே அதிகம்.
அவற்றில் ஒன்றுதான் பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் அடைதல் என்கிற பிரச்சினை. கடந்த 100 ஆண்டுகளில் சராசரியாக பெண்கள் பருவம் அடையும் வயது 13 வருடங்களுக்கு குறைவாகவே மாறியிருக்கிறது. இருந்தாலும் சில பெண் குழந்தைகள் மிக சீக்கிரமே, அதாவது 10 வயது அல்லது அதற்கு குறைவாகவே பருவம் அடைந்து விடுகிறாரகள். இதற்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும் புரளிகள் பல வருவது பெற்றோர்களை கவலை அடைய செய்வதாகும். இதில் முக்கியமானது பெண் குழந்தைகள் பிராய்லர் கோழி இறைச்சி அதிகம் உண்பதால்தான் என்பதாகும்.
COURTESY : DINAMALAR
ஆனால் சமீப ஆராய்ச்சி ஒன்று இந்த கட்டுக்கதையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை பல்கலைக்கழகம் அதன் ஆராய்ச்சி மூலம் கீழ்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளன.
மொத்த ஆராய்ச்சி மாதிரிகள் 2446 பெண்கள். இவற்றில் சைவ உணவு உண்பவர்கள் மொத்தம் 979. இதில் 939 பெண்கள் 10 இல் இருந்து 15 வயதுக்குள் பருவம் அடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் முதலில் 2 விஷயங்கள் தெளிவாகின்றன.
1. பருவம் அடையும் வயதிற்கும் சைவ, அசைவ உணவு பழக்கத்திற்கும் பெரிய தொடர்பு ஏதும் இல்லை.
2. அசைவ உணவு சாப்பிடாத பெண் குழந்தைகளில் சிலரும் 10 வயதிற்கு கீழே பருவம் எய்த வாய்ப்பு இருக்கிறது.
இந்த ஆராய்ச்சியில் அசைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 1476 ஆகும். இதில் வெறும் 60 பேர் மட்டுமே 10 வயதிற்கு கீழே பருவம் அடைந்திருக்கிறார்கள்.
இதில் சைவத்தில் முட்டை மட்டும் சாப்பிடுபவர்கள் என்கிற வகையினரும் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் மொத்தம் 2075 பேர் பிராய்லர் கோழி மற்றும் முட்டை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள்.
ஆராய்ச்சியில் சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கும் 10 வத்திற்கு கீழே பருவம் அடைந்த 100 பேர்களின் காரணிகளை ஆராய்ந்து நோக்கியதில் பின் வரும் முடிவுகள் வெளி வந்துள்ளன.
10 வயதிற்குக் கீழே பருவம் அடைவதற்கான முக்கிய காரணிகள்:
1. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெற்றோருக்கு உள்ள வியாதிகள்
2. உடல் எடை மற்றும் உயரம்
3. குடும்ப பெண்களின் பருவம் அடைந்த வயது
4. சிகப்பு இறைச்சி என்று சொல்லப்படும் ஆட்டிறைச்சி போன்ற விலங்கு மாமிசங்கள்
முட்டை மற்றும் பிராய்லர் கோழி இறைச்சி உண்பதனால் பெண்கள் சீக்கிரம் பருவம் அடைகிறார்கள் என்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக்குகிறது. இந்த ஆராய்ச்சி கட்டுரை இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடான “ட்ரக்ஸ் டுடே” என்கிற பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீண்ட காலமாக பிராய்லர் கோழி சுமந்த பழி விலக்கப்பட்டுள்ளது. இனி தாய்மார்கள் தைரியமாக தங்கள் குழந்தைகள் விரும்பும் சுவையான பிராய்லர் கோழி இறைச்சியை சமைத்து கொடுக்கலாம். வீட்டில் எண்ணையில் பொறிக்காத வகை சமையலில் உங்கள் கை வண்ணத்தை காட்டுங்கள்.
பிராய்லர் கோழி இறைச்சியில் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதம் மிகுந்து காணப்படுகிறது. இன்றியமையாத 9 அமினோ அமிலங்கள் இருந்தால் தான் முழுமையான உடலுக்கு சேரும் புரதமாக கருதப்படுகிறது. இந்த 9 அமினோ அமிலங்கள் முற்றிலும் உள்ள புரத உணவு பிராய்லர் கோழி இறைச்சியாகும்.
கண்காணிப்புடன் உயர் ரக மக்காச்சோளம் மற்றும் சோயா கலவையை உண்டு சுத்தமான குடி நீர் மற்றும் காற்றோட்டமான சூழ்நிலையில் வளரும் இந்தக் கோழிகள் தினந்தோறும் கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.
வளர்ச்சிக்காக ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சமும் உண்மை இல்லாத புரளிகளாகும்.
உயிர்காக்கும் தடுப்பூசி பொறித்த குஞ்சுக்கு முதல் நாளே போடப்படும் இதை ஹார்மோன் ஊசி என்று தவறான புரிதல் இருக்கலாம். மேலும் கோழிகள் பாக்டீரியா நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கவும் அது மனிதர்களுக்கு பரவாமல் இருக்கவும் தேவையான ஆன்டி பையோட்டிக் கால்நடை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கொடுக்கப்படுகிறது. அதுவும் கொடுக்கப்படும் மருந்தின் தன்மை அல்லது கழிவு இறைச்சியில் இருக்க கூடாது என்கிற உணவு தரம் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப அளிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட எந்த ஒரு மருந்தும் கோழிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை.
மேலும் பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை [PFRC] என்கிற சுய தணிக்கை அமைப்பினால் அனைத்து கறிக் கோழி பண்ணைகள், தாய் கோழி பண்ணைகள் ஆகியவை அனைத்து பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் முறையான தணிக்கை செய்யப்படுகிறது.
எனவே ஆராச்சியின் அடிப்படையிலும் நடைமுறையில் பின்பற்றக்கூடிய வளர்ப்பு முறைகளினாலும் பிராய்லர் கோழி இறைச்சி ஒரு பாதுகாப்பான, உடலுக்கு நன்மை மட்டுமே அளிக்கக்கூடிய அசைவ உணவாகும்.
தாய்மார்கள் இனி எந்தவித தயக்கமின்றி சுவையான பிராய்லர் கோழி இறைச்சியை, பிரியாணி, கோழி குழம்பு, கோழி மிளகு பிரட்டல், தந்தூரி, கிரில், செட்டிநாடு வகைகள் என்று எண்ணையில் பொறித்த வகைகள் அல்லாது மற்ற அனைத்தையும் சமைத்து எந்த சந்தேகமும் இன்றி அனைவரும் உண்டு மகிழலாம்.
SOURCES:
Article Id: JPRS-P’Col-00005215
Title: Impact of poultry consumption by adolescent females – An analytical study
Link: https://www.researchgate.net/publication/343682619_Impact_of_poultry_consumption_by_adolescent_females_-_An_analytical_study
Responses